சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 January 2010

இதுகூட தெரியாதா..?


போன வாரம்
நாற்பதாயிரம் ரூபாய்க்கு
ஒரு செக் எழுதிட்டு இருந்தேன் .


அதுல
" Fourty Thousand "-ன்னு
எழுதி இருந்தேன்.,


இதை பார்த்த என் மனைவி

" Fourty " இல்லீங்க " Forty " .
அதுதான் Correct -ன்னு சொன்னாங்க..

உடனே எனக்கு கண்ணுக்கு மேல
கோபம் வந்துடுச்சி..
( ஏன்., எப்பவும் மூக்குக்கு

மேல தான் கோபம் வரணுமா..? )

" திருவள்ளுவருக்கே திருக்குறளா..? "

நானெல்லாம் பிளஸ் 2 -ல
கணக்குல 84 மார்க் ( 200 க்கு )
எடுத்தவனாக்கும்..!

உடனே என் நண்பனை போன்ல
கேட்டேன்..

நான் எழுதினது சரின்னு சொன்னான்..

Bank -க்கு போனவுடனே மானேஜரை
கேட்டேன்..

நானே இப்படித்தான் எழுதுவேன்னு
சொன்னாரு..


இதையெல்லாம் சொன்னாலும்
என் மனைவி ஒத்துக்கிறதா தெரியலை..

வேற வழியில்லாம
Dictionary -ஐ புரட்டி பார்த்தா..
" Forty "-ன்னு போட்டு இருந்தது..
( அடப்பாவிகளா.., மாத்திடீங்களா.,
சொல்லவேயில்ல...! )

இப்பல்லாம் நான் யாரை பார்த்தாலும்
கேட்கிற முதல் கேள்வி..,
" 40 " - இதை இங்கிலிஷ்ல எப்படி
எழுதுவீங்க..?

என்னை மாதிரி எத்தனை மாங்கா
இருக்குன்னு
தெரிஞ்சிச்கனும்ல..!

நீதி : நிறைய பேர் செய்வதால்
ஒரு விஷயம் சரின்னு ஆயிடாது..
சிகரெட் கூடத்தான் நிறைய பேர்
குடிக்கிறாங்க..
அதுக்காக அது சரியா..?
.
.

29 January 2010

பல்ப் வாங்கலியோ..?

.
சில சமயம் நம்மளை சுத்தி
நடக்கிற விஷயங்கள்
சுவாரசியமா இருக்கும்..
அதையெல்லாம் ரசிக்க பழகணும்..
அது நாம பல்ப் வாங்கினதா இருந்தாலும்..,


பல்ப் : 1
---------
என் நண்பனிடம் நான்...

நான் : " டேய்.. என் ஆட்டோகிராப்
வேணும்னா இப்பவே வாங்கிக்க.,
அப்புறம் நான் பாப்புலர்
ஆன பின்னாடி வருத்தபடாதே..!"

நண்பன் : " அப்படி ஒரு நிலைமை வந்தா..,
நான் தற்கொலை பண்ணிக்குவேன்டா..! "

பல்ப் : 2
----------
பேச்சு போட்டிக்கு என் மகனுக்கு பயிற்சி
கொடுத்த போது..

நான் : " இதுக்கே நீ இப்படி தடுமாறினா..,
அப்புறம் முக்கியமானதை எல்லாம்
எப்படிடா சொல்ல போற..? "

மகன் : " அப்ப முக்கியமானதை எல்லாம்
விட்டுட்டு., இதை எதுக்குப்பா
சொல்லி குடுத்திட்டு இருக்கே..!"

பல்ப் : 3
----------

காலேஜ் படிக்கும் போது நடந்தது..
ஹால் டிக்கெட்டை கையில் வாங்கியவுடன்.,
ஹால் டிக்கெட் நம்பரை கூட்டி பார்த்தேன்..

நான் : " பரீட்சை நல்லா எழுதிடலாம்..!
என் லக்கி நம்பர் " 5" வந்து இருக்கு..! "

நண்பன் : அப்ப பரீட்சை பேப்பர்ல
உன் ஹால் டிக்கெட் நம்பரை மட்டும்
எழுதிட்டு வா., பாஸ் ஆகறியான்னு
பார்க்கலாம்..!
.
.

28 January 2010

தலைக்கு மேல வேலை


தலைக்கு மேல வேலை வந்தாலே.,
நான் Tension ஆயிடுவேன்..

மாசம் ஒரு தடவை
சலூனுக்கு போகணுமே.,
அதை சொன்னேன்..

இதெல்லாம் கஷ்டமான்னு
சில பேர் கேட்பாங்க..

" ஒரு ஆம்பளையோட கஷ்டம்.,
இன்னொரு ஆம்பளைக்கு தான்
தெரியும்..!! "

நான் சலூனுக்கு போற அன்னிக்கு தான்
ஊர்ல பாதி பேருக்கு முடி வெட்டிக்கலாம்னு
தோணும் போல..

எனக்கு முன்னாடியே வந்து
உட்கார்ந்து இருப்பாங்க..

அங்கே ஒரு நியூஸ் பேப்பர் இருக்கும்..,
அதை நான் படிக்கிறதே இல்லை..

( எப்படியும் எல்லோரும்
பிச்சி எடுத்ததுபோக.,
எனக்கு " வரி விளம்பரம் "
இருக்கிற பக்கம் தான் கிடைக்கும்.. )

அங்கே சின்ன பசங்களை கூட்டிட்டு
வர்ற அப்பாக்கள் பண்ணுற
ரவுசு இருக்கே.. அப்பப்பா..!

கத்திரி தேய தேய வெட்டினாலும்
" இங்க வெட்டுங்க..,
அங்கே வெட்டுங்கன்னு "
ஒரே இம்சைதான்.

அதுக்கு பேசாம " மொட்டை அடின்னு "
சொல்லிட்டா ஒரே வேலையா
போயிடும்ல..

அப்புறம் இந்த பெருசுங்க..
உள்ளூர் அரசியல்ல இருந்து
ஒபாமா வரைக்கும்
அலசுவாங்க பாருங்க..

நொந்து Noodles ஆகவேண்டியது தான்.

2-மணி நேரம் கழிச்சி தான்
என் முறை வரும்..

அப்ப நம்ம சலூன்காரர்
" சார்.. ஒரு டீ குடிச்சிட்டு வந்திடறேன்னு..! "
ஒரு அரை மணி நேரம் " எஸ் " ஆயிடுவார்..

அப்பல்லாம் எனக்கு
இப்படி தோணும்..

" எப்படிதான் இந்த பொண்ணுங்க
அடிக்கடி பியூட்டி பார்லர்
போறாங்களோ..!? "
.
.

27 January 2010

கோடியில் ஒருவன்..?!?


" சொந்த
காசுல சூனியம் வெச்சிகிறது..! "

அப்படின்னா என்ன தெரியுமா..?
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துக்கு போறது..!

படத்தை முழுசா பார்த்திட்டு.,
Mental ஆகாம யார் இருக்காரோ..
அவருதான் நிஜமாலுமே
" ஆயிரத்தில் ஒருவன்..! "

படத்துக்கு " கோடியில் ஒருவன் " பேர்
வெச்சி இருக்கலாம்..
Atleast எம்.ஜி.ஆர். பட தலைப்பாவது
தப்பிச்சி இருக்கும்..!

இனிமே எம்.ஜி.ஆர் பட தலைப்பை
யாரும் பயன்படுத்த கூடாதுன்னு
யாரவது கேஸ் போட்டா கூட
பரவாயில்லை..

அவங்களுக்கு புண்ணியமா போகும்..!
.
.

26 January 2010

சினிமா to அரசியல்..


மத்த நாடெல்லாம் வரைபடத்துல இருக்கு.,
இந்தியாவோ திரைப்படத்துல இருக்குன்னு
சும்மாவா சொன்னாங்க..?!

விஜய் கட்சி ஆரம்பிக்க போறார்..,
சினேகா அரசியலுக்கு வர போறாங்க..,
குஷ்பூ அடுத்த தேர்தல்ல நிற்க போறாங்க..!

என்ன இதெல்லாம்..?

" தமிழ்நாட்டோட தலைவிதி..!"

2011.ல முதலமைச்சர் கனவோட
ஏற்கனவே
27 பேர்
தமிழ்நாட்டுல சுத்திட்டு இருக்காங்க..

அதுல இவங்க வேற..

அரசியலுக்கு வர தகுதி
நடிக்க தெரிஞ்சா போதுமா..?

அருள் பிரகாஷோட ஒரு கவிதைதான்
ஞாபகத்துக்கு வருது..

"ஒரே மேடையில்
ஆடை மாற்றி நடிப்பது - நாடகம்..,
ஒரே ஆடையில்
மேடை மாற்றி நடிப்பது - அரசியல்..! "

காமராஜரும்., அண்ணாவும்
இருந்த அரசியல்
இன்னிக்கு கேலியா போயிடுச்சா..?

யோசி தமிழா.., யோசி..!
.
.

23 January 2010

நேதாஜி - ஒரு சல்யூட்


காந்திஜி ., நேருஜி பிறந்தநாள் தெரியும்..!
நேதாஜி பிறந்தநாள்...?

நம்ம பல பேருக்கு தெரியாது..
அந்த நாள் -
ஜனவரி 23

நம்ம நேதாஜியை
ஜெர்மனிய வரலாறு
"உயர்ந்த புரட்சி வீரன்" கொண்டாடுது..

ஆனா., இந்தியா..?

ஜெயித்தால் புரட்சியாளன்..,
தோற்றால் தீவிரவாதி..! - இது தான்
புரட்சியாளர்களுக்கு கிடைக்கும் பரிசு..

" சுதந்திரம் " அகிம்சை வழியில் வந்ததால்
நேதாஜியின் புரட்சி வழி தப்புங்கிற
மாதிரியே ஒரு மாயை உருவாக்கிட்டாங்க..

கட்டபொம்மனும்., மருது சகோதரர்களும்
செய்தது சரின்னா..,
பிடல் காஸ்ட்ரோவும்., சே குவேராவும்
செய்தது சரின்னா..,

நேதாஜி செய்தது மட்டும் எப்படி
தப்பாகும்..?

நேதாஜி பிரிடிஷ்காரனை எதிர்த்தார்
கூடவே
அகிம்சையையும் எதிர்த்தார்..,

"சுதந்திரம்" என்பது
பிச்சை கேட்பதில்லை..,
நாமே எடுத்துக்கொள்வது என்றார்.

மக்கள் சக்தியை வீணடிக்கிறார் என்று
காந்திஜி மீதுகூட அவருக்கு
கோபம் இருந்தது..

உங்க வீட்டுல யாரோ வந்து.,
உங்களையே அடாவடி.,
அதிகாரம் பண்ணினா..
நீங்க என்ன பண்ணுவீங்க..?

* " வெளிய போங்கன்னு..! "
உண்ணாவிரதம் இருப்பீங்களா..?

- இல்ல..,

* நாலு தட்டு., தட்டி துரத்துவீங்களா..?

முன்னது காந்தி வழி.,
அடுத்தது நேதாஜி வழி..
இப்போ நீங்களே முடிவு பண்ணுங்க..!

" நேதாஜி " - இந்த உயர்ந்த தலைவனை
பற்றி ஒரு பதிவில் எழுதிவிட முடியாது..
ஆனா.,
ஒரு புத்தகத்தை மட்டும்
பரிந்துரை செய்ய முடியும்.

" நேதாஜி - ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம் "

புத்தகத்தை படிச்சவுடனே
மனசு வலிக்கிறதையும்.,
நரம்புகள் துடிக்கிறதையும்
உங்களால தடுக்கவே முடியாது..

இது நாள் வரைக்கும்
நேதாஜி பத்தி தெரியாதது
தப்பில்ல.., - ஆனா..
இனிமேலும் தெரிஞ்ச்சிக்காம
இருக்கிறது ரொம்ப தப்பு..!

பின் குறிப்பு : மேலே இருக்கும் படத்தில்
இருப்பது நேதாஜியே அல்ல..,
இதை நீங்க கண்டு பிடிச்சீங்களா.?
.
.

20 January 2010

சின்ன சின்ன கவிதைகள்ஊருக்கே
ஜோசியம் சொன்ன
ராமசாமி ஜோசியருக்கு
தெரியாது..,
மகனிடம் இருந்து
இந்த மாசமாவது
பணம் வருமா என்பது..!

( ஆனந்த விகடனில் பிரசுரமானது...)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குழந்தையை
அடித்துவிட்டால்
அழும் -
அம்மாவின் மனசு..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
.

18 January 2010

மாசம் 20000 ரூபாய் மிச்சப்படுத்துவது எப்படி..?ஏன்..? எதுக்கு..?

இப்படியல்லாம் குறுக்கு கேள்வி

கேட்காம நான் சொல்லுறதை
மட்டும் கேளுங்க..,

* ஞாயிற்றுக்கிழமை ஒரு 5000 ரூபாவை
எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுகோங்க..

* வெளிய போயி உங்க இஷ்டப்படி

செலவு பண்ணுங்க.. ஆனா வீட்டுக்கு
வரும்போது பணம் காலியாயிருக்கணும்.,
அவ்வளவுதான்.

* ஒரு வாரம் மட்டுமில்ல தொடர்ந்து 

நாலு வாரம் இதே மாதிரி செய்யணும். 
( இது ரொம்ப முக்கியம். )

* அப்ப மாசக் கடைசியில 20,000 ருபாய்
செலவாயிருக்கும். கரெக்டா..?

* இப்ப குப்புற படுத்து யோசிப்பீங்களோ..,

இல்ல மல்லாக்க படுத்து யோசிப்பீங்களோ
எனக்கு தெரியாது. - ஆனா 
" ஏன் செலவாச்சின்னு " யோசிங்க.

* ஆங்..! கண்டுபிடிச்சிடீங்களா..?


ஞாயிற்றுக்கிழமை வெளியே போனதால..

* அப்ப இனிமே ஞாயிற்றுகிழமை 

வெளியே போகாம வீட்டுலையே இருங்க..
20,000 ரூபாய் மிச்சம் தானே..!

( ஏன்.., ஏன்.. உணர்ச்சிவசப்படறீங்க.. 

பொறுமை., பொறுமை. )

" பொறுமை.., எருமையை விட 

பெருசுன்னு.. " நீங்க கேள்விப்பட்டதில்ல..
.
.

15 January 2010

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1
முன்குறிப்பு : இரண்டாம் வகுப்பு படிக்கும்
என் மகன் பள்ளி சுதந்திர தின விழாவில்
பேசியது..!

தலைப்பு : நமது இந்தியா..!

நம்ம நாட்டுக்கு சொந்தமா
ஒரு கொடி பறக்குது.,
சுதந்திரமனா அது மட்டும் தானா..?

சுதந்திரத்துக்கு அப்புறம் பாகிஸ்தான்.,
ஆப்கானிஸ்தான், இலங்கை., மியன்மர்
இந்த நாடுங்க எல்லாம்
தட்டு தடுமாறி.,
தடம் மாறி போயிடுச்சி.,

ஆனா.., 62 வருஷமா நாம மட்டும்
ஸ்டெடியா இருக்கோம்.
ஏன்னா.,

" நம்ம வழி., தனி வழி..! "

வல்லரசுகளே ஆச்சரியப்படும்
நல்லரசு நம்ம இந்தியா..!

நிலாவ காட்டி சாப்பிட்டோம் -
அது அந்த காலம்...,
நிலாவுக்கே போயி சாப்பிடுவோம் -
இது இந்த காலம்.

இந்த வளர்ச்சி - சுதந்திரம் நமக்கு 
தந்தது.

சுதந்திர தினத்தை இப்பல்லாம்
யார் கொண்டாடுறா.?

அரசு கொண்டாடுது..,
ஸ்கூல்ல நாம கொண்டாடுறோம்..!
மத்தவங்கல்லாம் என்ன பண்றாங்க.?

ஒரு ரூபாய்க்கு கொடியை வாங்கி
சட்டைல குத்திக்கறாங்க.,
அதையும் பல பேர் தலைகீழா
குத்திக்கறாங்க.,

ஆபீசுக்கு லீவ் விடறாங்க.,

தலைவர்கள் அறிக்கை விடறாங்க.,

நடிகர்கள் பேட்டி கொடுக்கறாங்க.,

டிவில புது படம் போடறாங்க..!

அவ்ளோதான்...,

மொத்தத்துல சுதந்திர தினத்தை
திருவிழா மாதிரி கொண்டாடணும் - ஆனா
திரும்பிகூட பார்க்கறதில்ல நாம..

" என்ன கொடுமை சார் இது...! "

சுதந்திர தினம் அன்னிக்கு
நம்ம சட்டைல இருக்கிற தேசியகொடி
அடுத்த நாள் என்னாவுது..?

நம்ம கொடிக்கு ஒரே ஒரு நாள்தான் மதிப்பா.?

" கோடு எங்கே வேணா போடலாம்..- ஆனா
ரோடு வீட்டுக்கு வெளியில தான் போட முடியும்..! "

அதே மாதிரி
New Year., Friendship Day இதெல்லாம்
யார் வேணா கொண்டாடலாம் - ஆனா
நம்ம சுதந்திர தினத்தை
நாம தானே கொண்டாடணும்॥!?

" கூட்டி கழிச்சி பாருங்க
கணக்கு சரியா வரும்..! "

வருஷம் தவறாம் சுதந்திர தினம்
கொண்டாடுபவர்களே..!
இனியாவது தினங்களை விட்டு
சுதந்திரத்தை கொண்டாடுங்கள்.

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லுறேன்..
பஞ்ச் டயலாக்கெல்லாம் கடைசிலதான்
சொல்லணும்..

" இந்தியாவ நேசிங்க..,
அதை மட்டுமே யோசிங்க..! "

ஜெய் ஹிந்த்..!
பின் குறிப்பு : பேச்சில் நிறைய நெகடிவ்
விஷயங்கள் இருப்பதாக கூறி 1st Prize 
மறுக்கப்பட்டு 2nd Prize தான் தரப்பட்டது

இது மனதுக்கு சற்று வருத்தமாகத்தான்
இருந்தது.

நீங்க என்ன நினைக்கிறீங்க.?

டிஸ்கி : மேலும் சில பேச்சு போட்டிகள்..

பேச்சுப்போட்டி - 2
பேச்சுப்போட்டி - 3
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
.