சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 November 2013

" சச்சின் " - ஒரு சின்ன Intro...!!நேத்து என் ப்ரெண்ட் சுரேஷ்
மெடிக்கல்ஸ்ல நானும், அவனும்
கிரிக்கெட் பத்தி பேசிட்டு இருந்தோம்..

பேச்சு சூடு பிடிச்சு., கார சாரமா
போயிட்டு இருந்தது..

பக்கத்துல ஒரு மெடிக்கல் ரெப் வேற
இருந்தாரு... நாங்க பேசறதை
சுவாரசியமா கேட்டுட்டு இருந்தாரு..

ஒரு கட்டத்துல நான்...

" ஹே.. கிரிக்கெட்ல நீதான் பெரிய ஆளுன்னு
அலட்டிக்காதே.. உனக்கு சச்சினை Introduce
பண்ணி வெச்சது யாரு..? அது ஞாபகம்
இருக்குல்ல...!! "

இதை கேட்டதும் அந்த ரெப் ஷாக் ஆகிட்டார்...

" என்ன சார் சொல்றீங்க..? நிஜமா..? "

" நிஜமா இல்லையானு அவனையே
கேளுங்கனு " சுரேஷை கை காட்டினேன்..

அவனும் " ஆமாம் " தலை ஆட்டினான்..

இப்ப அந்த ரெப்க்கு என் மேல மரியாதை
பல மடங்கு கூடி போயிருந்தது அவர்
முகத்துல தெரிஞ்சது..

அவர் என்கிட்ட ரொம்ப பவ்யமா..

" சார்.., சார்.., எப்ப சார் சச்சினை பாத்தீங்க..?
எப்படி Introduce பண்ணுனீங்க..?!! "

" அது வந்து... 1989-னு நினைக்கிறேன்..
ரஞ்சி டிராபி மேட்ச்... "

" ம்ம்..!! "

" நாங்க டிவில மேட்ச் பாத்துட்டு
இருக்கும் போது சொன்னேன்...

இவர் தான்டா சச்சின்..! "

ஆமா இப்ப நான் என்ன தப்பா
சொல்லிட்டேன்.. எதுக்கு அந்த ரெப்
என்னை அப்படி முறைக்கறான்..?!!
.
.

23 November 2013

நூடுல்ஸ் Vs ஃபுல் மீல்ஸ்

மணி : 2 மணி...
இடம் : சரவண பவன் ஹோட்டல்

எனக்கு பசி வயித்தை கிள்ளுது..
அங்கே பாத்தா செம கூட்டம்.., 
உக்கார இடமே இல்ல.. 

சரினு.. சுத்தி முத்தி பார்த்தேன்... 

2a + 2b = 4c

ஹி., ஹி., ஒண்ணுமில்ல... 
யார் பர்ஸ்ட் எந்திரிப்பாங்கனு 
என் மனசு கணக்கு போடுது...!!

அப்படி நான் அலசி ஆராஞ்சி 
நான் ஒரு முடிவுக்கு வந்து போயி 
நின்னது 3வது டேபிள் பக்கத்துல..

அங்கே சாப்பிட்டுட்டு இருந்தது 
ஒரு பொண்ணு... 

இப்ப எதுக்கு எல்லோரும் மனசுக்குள்ள 
சிரிச்சிக்கறீங்க.. Very Bad-ங்க நீங்க..!

அதுக்கு என்ன காரணம்னா.. 

அங்கே எல்லோரும் புல் மீல்சை
ஒரு கட்டு கட்டிட்டுயிருந்தாங்க.. 

ஆனா அந்த பொண்ணு நூடுல்ஸ் 
சாப்பிட்டுட்டு இருந்தது.. அதுவும் 
இன்னும் பாதி கப் தான் இருந்தது.... 

ம்ம்.. போதுமா... அதுக்குள்ள 
ஒரு பச்சை புள்ளை மேல பாய்சன் 
தெளிக்க பார்க்கறீங்களே.... சரி..  நானும் போயி நின்னேனா.. 

ரெண்டு நிமிசம் ஆச்சு... 

4வது டேபிள்ல ஒரு சீட் காலி 
ஆச்சு.. அச்சச்சோ மிஸ்ஸூ.. 

அந்த பொண்ணு இன்னும் நூடுல்ஸ்சை 
கிளறிட்டு இருந்து..

4வது நிமிஷம்...

இப்ப முதல் டேபிள்ல ஒரு சீட் 
காலி அதுவும்.. மிஸ்ஸூ.. 

இப்பவும் அந்த பொண்ணு நூடுல்ஸ்சை 
நோண்டிட்டு இருந்து..

7வது நிமிசம்., 
8வது நிமிஷம், 
10வது நிமிஷம் 

வரிசையா எதோ ஒரு சீட் காலி 
ஆகிட்டு இருந்தது..  மத்தவங்க 
உக்காந்துட்டே இருந்தாங்க..

நான் அந்த பொண்ணை பார்த்தேன்..
எனக்கு செம கடுப்பாயிட்டது...

" எக்ஸ்கியூஸ் மீ மேடம்..!! "

" யெஸ்.. " 

" எனக்கு ஒரு டவுட்டு..!! " 

" சொல்லுங்க..!! "

" நீங்க நூடுல்ஸ்ல் சாப்பிடறீங்களா.? 
இல்ல எண்ணுறீங்களா..?!! " 

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..! " 

21 November 2013

ஓ... மை காட்..!!!


இன்னிக்கு காலைல மங்குனி அமைச்சர்க்கு
போன் போட்டு....

" மங்கு.... உனக்கு ஒரு விஷயம்
தெரியுமா..?!! "

" என்ன..? "

" அடுத்த வருஷம் ( 2014 ) குடியரசு தினம்,
மஹாவீர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி,
பக்ரீத்.. இந்த நாலு லீவும் சண்டேல
வருது..!! "

" ஓ... மை காட்...!! நிசமாவா சொல்ற..?!! "

" நீ வேணா செக் பண்ணிக்கோ...!! "

உடனே மங்கு காலண்டரை புரட்டி
பார்க்கும் சத்தம் கேக்கிறது..

ஒரு நிமிஷம் கழித்து லைனில்
வரும் மங்கு...

" ஹப்பாடி.. நல்லவேளை வெங்கட்..,
இந்த வருஷமும் Good Friday சண்டேல
வரல...!! "

" ஐயோ ராமா... என்னை ஏன் இந்த
மாதிரி பக்கிங்க கூட எல்லாம் கூட்டு
சேர வெக்கிற..?!!!! "

.
.

18 November 2013

தமிழ் வளர்த்த சான்றோர்கள்.. ( பாரதி )

டிஸ்கி : 6th Std படிக்கும் என் மகன் சூர்யா
ஸ்கூல் பேச்சுப்போட்டியில் பேசியது...என் இனிய தமிழ் மக்களே...!!!

இதுவரை வகுப்பில் மட்டுமே
பேசிக்கொண்டிருந்த உங்கள் சூர்யா.,
இன்று மேடை ஏறி பேச வந்திருக்கிறேன்...

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்..!!

தமிழ் வளர்த்த சான்றோர்கள்…
ஒருத்தரா., ரெண்டு பேரா...?!!!

உ.வே.சாமிநாத அய்யர்., பரிதிமாற் கலைஞர்.,
மறைமலை அடிகள்., மு. வரதராசன்.,
ரா.பி.சேதுப்பிள்ளை., ச. வையாபுரிப் பிள்ளை
பாரதியார், பாரதிதாசன்..

இப்படி ஆயிரம் ஆயிரம் பேர் இருக்காங்க...

ஆனா நான் இன்னிக்கு பேச போறது
மகாகவி பாரதி பத்தி..

பாரதீ.. எங்கள் பாரதம் பெற்றெடுத்த தமிழ் தீ...!!

தமிழுக்கு அவர் செஞ்ச சேவைகளை
வரிசையா அடுக்கினா...
சீனப்பெருஞ்சுவரே சிறுசா போயிடும்..!!!

அவருக்கு முன்னால எழுதினவங்க
எல்லாம் தொல்காப்பிய இலக்கணம்
மாறாம மரபுக் கவிதையா எழுதினாங்க...

அதெல்லாம் நல்லா படிச்சவங்களுக்கு
மட்டுமே புரிஞ்சது....

ஆனா பாரதி..

எல்லா இலக்கணத்தையும் தூக்கி தூர
போட்டுட்டு புதுக்கவிதை எழுதினாரு..
அது சாதாரண மக்களுக்கும் போய்
சேர்ந்தது..

இப்ப புரியுதா...

அவர் வழி... தனி வழி..!!

ராஜாங்க காலத்துல தமிழ் ரொம்ப நல்லா
இருந்துச்சு... புலவர்களுக்கு பரிசு எல்லாம்
கொடுத்து தமிழை வளர்த்தாங்க....

ஆனா பாரதியோட காலத்துல அப்படியா..?!

சபையில சமஸ்கிருதம்.,
ஆட்சியில ஆங்கிலம்...

இதை பாத்துட்டு

வேற மொழிக்கு கட் அவுட்டு.,
தமிழுக்கு கெட் அவுட்டான்னு
பொங்கினாரு பாரதி...

அப்பல்லாம் கச்சேரில கூட சமஸ்கிருத
பாட்டுதான்...

ஒண்ணுமே புரியாது,,, ஆனாலும் தலையை
ஆட்டிட்டு இருப்பாங்க...

இப்ப எல்லா கச்சேரிலயும் தமிழ் பாட்டு
கேக்குதுன்னா.. அதுக்கு காரணம் நம்ம பாரதி..
நிறைய தமிழ்பாட்டு எழுதி இருக்காரு...

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..

" மெல்லத் தமிழ் இனி சாகும்னு " பாரதியே
சொல்லி இருக்கார்னு சில பேர் சொல்லுவாங்க...

ஆனா.. பாரதி அப்படியா சொன்னாரு...??

" மெல்லத் தமிழ் இனி சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் !
என்றந்தப் பேதை உரைத்தான் ! "-னு
சொல்றாரு...

" பேதைனா " பைத்தியக்காரன்னு அர்த்தம்...

இனிமே " மெல்லத் தமிழ் இனி சாகும்னு "
பாரதி சொல்லி இருக்கார்னு யாராச்சும்
உங்ககிட்ட சொன்னா...

" லூசாப்பா நீ..? " அப்படின்னு திருப்பி
கேளுங்க...!!

என்ன.. அங்கங்கே இங்கிலீஷ் வார்த்தை
வருதேனு பார்க்கறீங்களா... பாரதி ஒண்ணும்
இங்கிலீஷ்க்கு எதிரி இல்லயே....

அவருக்கு தமிழ், தெலுங்கு., இங்கிலீஷ்,
ப்ரெஞ்ச், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம்னு
பல மொழிகள் தெரியும்..

இருந்தாலும்

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்னு..... "

தமிழை தான் உயர்வா பாடி இருக்காரு...

அதுமட்டுமா.. வேற மொழி இலக்கியங்களையும்
தமிழ்ல மொழி பெயர்ப்பு செஞ்சாரு...

அவரை பொறுத்தவரை
மொழி தான் ஞானம்.
மொழிப்பற்று என்பது மானம்

ஆனா... இன்னிக்கு தமிழ்..?
" நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "

இப்ப ஐபோன்ல தமிழ் வந்துடுச்சி.,,
ஃபேஸ்புக்ல தமிழ் வந்துடுச்சி.,,
இவ்ளோ ஏன்..
டிஸ்கவரி சேனல்ல கூட தமிழ்
வந்துடுச்சி..

ஆனா.. ஒரு சில தமிழர்கள் வாய்ல தான்
தமிழ் வரல..

தமிழ் தெரியாத இங்கிலிஷ்காரங்கிட்ட
தமிழ்ல பேசறது இல்ல... - ஆனா..
இங்கிலீஷ் தெரியாத தமிழன்கிட்ட
இங்கிலீஷ்ல பேசறது...

" கிட்ட தட்ட நான் ஒரு வெள்ளைக்காரனாவே
மாறிட்டேன்னு " சொல்றதுல நம்மாளுங்களுக்கு
ஒரு பெருமை..

என்ன கொடுமை சார் இது....?!

பாரதி என்ன மேற்கோளுக்காகவா
எழுதினார்..?
குறிக்கோளுக்காக எழுதினார்....

அவர் வாழ்க்கை..
நெஞ்சில் நிறுத்திக்கொள்ள மட்டுமல்ல.
நம்மை திருத்திக்கொள்ளவும் தான்..

அழகா இருக்குது தமிழ் எழுத்து,
அழிவா தமிழனின் தலை எழுத்து.,
தமிழா புறப்படு அதை எதிர்த்து
இனி கடலும் வணங்கிடும் வழி கொடுத்து

நன்றி..!!
.
.

08 November 2013

என்ன ஒரு வில்லத்தனம்..?!

நான் அப்ப நாலாவது தோசை
சாப்பிட்டுட்டு இருந்தேன்...

அப்ப கிச்சன்ல இருந்து என் Wife
குரல்....

" ஏங்க... தோசை போதுமா...? "

" போதும்...!! "

" நான் இப்ப நெய் ரோஸ்ட் ஊத்த
போறேன்... உங்களுக்கு வேணுமா..?!! "

ஆஹா.. நெய் ரோஸ்ட்...!!!

உடனே என் கிரிமினல் மைண்ட்.,
சே.., டிடெக்டீவ் மைண்ட் ஒரு
திட்டம் போட்டது...

( நமக்குன்னா சுமாராத்தான் சுடுவா..
அதே அவளுக்குன்னா சூப்பரா சுட்டுக்குவா..
அதனால இப்ப வேணாம்னு சொல்லிட்டு.,
வரும்போது களவாடிக்கலாம்..!!!
ஹா., ஹா., ஹா... )


(  இந்த மாதிரி ஒரு தோசை சாப்பிடணும்னா.... 
எதுவுமே தப்பில்ல....!! )

" எனக்கு வேணாம் நிர்மலா...!!! உனக்கு
வேணும்னா சுட்டுக்க...! "

" அப்புறம் கேக்க கூடாது... கேட்டாலும்
குடுக்க மாட்டேன்...! "

" இல்ல கேக்க மாட்டேன்...! "

( அதை எப்படி மேட்டர் போட்டு
வாங்கணும்னு தெரியாதா..? நாங்க என்ன
இன்னிக்கு நேத்தா கால்ல விழறோம்..?!! )

ரெண்டு நிமிஷத்துல.. கமகமக்கும்.,
மணமணக்கும் நெய் ரோஸ்டோட
வந்தாங்க என் Wife...

நான் என் Wife-கிட்ட...

" நிர்மலா.. அந்த ரோஸ்ட்டை எனக்கு
வெச்சிடு.. நீ இன்னொன்னு சுட்டுக்க..
ப்ளீஸ்.. ப்ளீஸ்...!! "

என் மனைவி ஒரு முறை முறைச்சாங்க...

" உங்களுக்கு இதே வேலையா போச்சு...
கேட்டா வேண்டாம்னு சொல்றது.. அப்புறம்
கேக்கறது.. "

" கணவன் ஆசைப்பட்டு கேக்கும்போது
இல்லன்னு சொல்லக்கூடாது ஔவையாரே
ஒரு பாட்ல சொல்லி இருக்காங்க தெரியுமா..? "

" எந்த பாட்ல இப்படி எல்லாம் சொல்லி
இருக்காங்க..? "

" எல்லாம் சங்ககால பாட்ல தான்..! "

" போதும்.. இந்த தோசைக்காக ஔவையாரை
எல்லாம் வம்புக்கு இழுக்காதீங்க... இந்தாங்க
வெச்சிக்கோங்க.... "

எனக்கு அந்த தோசை வைக்கப்பட்டது..

" ஹா., ஹா.. ஹா... ப்ளான் சக்ஸஸ்..!!! "

இதை கேட்டு என் Wife சிரிச்சிகிட்டே
சொன்னாங்க...

" எனக்கும் தான்... "

" உனக்குமா..? அப்படின்னா..? "

" எப்படியும் கேப்பீங்கனு தெரியும்..
அதான் உங்களுக்கு எப்பவும் சுடற
மாதிரியே சுட்டேன்... "

" அடிப்பாவி.. என்ன ஒரு வில்லத்தனம்..?!! "
.
.