சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 April 2014

சங்கு... சாம்சங்கு..!!


என் ப்ரெண்ட்டு தினேஷு புதுசா LED TV 
வாங்க போனான்... 

எனக்கு நிறைய விஷயம் தெரியும்னு 
நம்பி... என்னையும் கூட வர சொன்னான்...

( அவன் தலையெழுத்து அப்படி இருந்தா 
நாம என்ன பண்ண முடியும்..?!! )

சரினு போனேன்... 

கடையில சாம்சங், சோனி ரெண்டு டி.வி 
பிடிச்சி இருந்தது... எதை வாங்கறதுனு 
ஒரே குழப்பம்... 

என்கிட்ட கேட்டான்.. 

" சாம்சங் வாங்கிக்கோ..!! " 

" மச்சி... அதைவிட சோனி 4 ஆயிரம் ரூபா 
ஜாஸ்திடா.. அதையே வாங்கிக்கலாமே..!! " 

" பணத்தை வெச்சி எல்லாம் தரத்தை 
எடை போடதே... நீ கம்முன்னு சாம்சங்கே 
வாங்கு..!! "

" இல்ல மச்சி... என்ன இருந்தாலும் சோனி 
ஜப்பான் கம்பெனி.. சாம்சங்.. கொரியா இல்ல..!! " 

" இன்னிக்கு டெக்னாலஜி எங்கையோ போயிடுச்சு...
இப்ப போயி ஜப்பான், கொரியானு பேசிட்டு.... " 

" சரி.. முடிவா என்ன சொல்ற..?!! " 

" முடிவா இல்ல... நான் ஆரம்பத்துல இருந்து 
ஒண்ணே தான் சொல்லிட்டு இருக்கேன்.. 
சாம்சங் எடு...!! " 

" ஓ.கே...!!  நீ சொன்னா எதாவது விஷயம் 
இருக்கும்...!! அதையே வாங்கறேன்.. " 

33,000 ரூபாய்க்கு பில் போட்டு சாம்சங் டிவியை  
வாங்கி.... கார்ல வெச்சிட்டு இருக்கும்போது 
தினேஷு கேட்டான்..... 
" அது ஏன் மச்சி... இந்த டிவியே தான் வங்கணும்னு 
ஒத்தை கால்ல நின்னே..?!! " 

" ஹி., ஹி., ஹி.,  இந்த டி.வில தானே தமன்னா பாட்டு 
ஓடிச்சி....!!! "

" அட... நாயே...!! "
.
.

24 April 2014

மொத வெட்டு.., சே.. வோட்டு..!!!பர்ஸ்ட் பர்ஸ்ட் இப்பதான் நான்
ஓட்டு போட போறேன்..

( ஓட்டு போடற வயசு வந்துடுச்சானு
கேக்கப்படாது.. ஸ்கூல்ல சேர்க்கும் போது
எங்கப்பா 2 வருஷம் டேட் ஆப் பர்த்
மாத்தி குடுத்துட்டாரு.. ஹி, ஹி.. )

மொத ஓட்டுச்சே... காலையிலயே
போட்டுடலாம்னு போனேனா...

அங்கே நின்னது பெரிய க்யூ.. மெதுவா
நகர்ந்துட்டு இருந்தது..

சரினு போயி க்யூல நின்னேன்...

அப்ப எனக்கு பின்னாடி வந்து
நின்னான் என் ப்ரெண்ட் குமார்...

" மச்சி.. ரொம்ப லேட் ஆகும் போல "

" ஆமாண்டா.. எப்படியும் 2 மணி நேரம்
ஆகும்னு நினைக்கிறேன்... "

" அப்படின்னா.. நான் வீட்டுக்கு போயிட்டு
ஒரு மணிநேரம் கழிச்சி வரேன்..!! "

" க்யூல உன் இடம் போயிடும்டா..!! "

" அப்டின்ர..?!! "

( ஒரு நிமிஷம் யோசிச்சான்.. அப்புறம்
வந்தான் ஒரு பெரிய கல்லோட..!! )

" எதுக்குடா இது..??!! "

" மச்சி.. இந்த கல்லை இங்கே வெச்சிட்டு
போறேன்.. இதான் என் இடம்... எப்புடி..?!!! "

" சூப்பரு...!! "

# இந்தியா சீக்கிரமே வல்லரசாகிடும்னு
நம்பிக்கை எனக்கு இருக்கு..!!
.
.

16 April 2014

எ சைக்கிள் ஸ்டோரி..!!!


என் ப்ரெண்டு ஜெகன் போன்
பண்ணியிருந்தான்..

" வெங்கி.. நான் புதுசா ஒரு சைக்கிள்
வாங்கி இருக்கேன்டா.. "

" பாப்பாவுக்கா..?!! "

" இல்ல எனக்குதான்.. வெயிட் குறைக்கணும் "

" சைக்கிள் எவ்ளோடா ..? "

" 16,000 ரூபா "

" அடேயப்பா... எதுக்குடா அவ்ளோ காஸ்ட்லியா
வாங்குனே..?!! "

" ஒட்றதுக்கு நல்லா இருக்குடா... நமக்கு
வெயிட் குறைக்கணும்.. அதானே முக்கியம்..! "

" கரெக்ட்டு... நானும் ஒரு 5 கிலோ குறைக்கணும்..
எதாவது ஐடியா இருந்தா சொல்லு..!! "

" வேற என்ன சைக்கிள்தான்..!! "

" நோ.. நோ.. சைக்கிள் எல்லாம் வேணாம்
வேற எதாவது ஈஸியா..... "

" கொஞ்சம் செலவாகுமே பரவாயில்லையா..?! "

" நோ ப்ராப்ஸ்... "

" அப்ப எங்கிட்ட ஒரு ஸ்டிக்கர் இருக்கு..
விலை 20,000 ரூபாய்.. அதை தினமும்
காலையில, நைட்டு ஒரு 10 நிமிஷம்
கையில ஒட்டிக்க போதும்..  "

" வாவ்... இதை தான் எதிர்பார்த்தேன்..!!
அது என்ன பண்ணிடா உடம்பை குறைக்கும்..? "

" அது ஒரு மண்ணும் பண்ணாது.. இதை
போயி 20,000 ரூபா கொடுத்து வாங்கிடோமேனு
நீயே கவலையில சோறு, தண்ணி சாப்பிடாம
தானா இளைச்சி போயிடுவ..!! "

" ஞே..!!! "
.
.

11 April 2014

அலைபாயுதே... ஆஹா., பாயுதே...!!!


" அலைபாயுதே " படத்துல ஷாலினிய விட
சொர்ணமால்யாதான் அழகு..

இந்த அழகான பொண்ணை விட்டுட்டு
எப்படி இந்த பய அவ தங்கச்சிகிட்ட போயி
லவ்வை சொல்றான்னு எனக்கு ஆச்சரியமா
இருந்துச்சு..

அதுமட்டுமில்ல சொர்ணமால்யாவை
ஹீரோயினா போட்டு இருக்கலாம்கிற
வருத்தம் எனக்கு இன்னிக்கு வரைக்கும் இருக்கு..

Why Mani..?!!! Why..?!!

சரி மேட்டர்க்கு வரேன்...

இன்னிக்கு இந்த போஸ்ட்டை டைப் பண்ணிட்டு
இருக்கும் போது என் Wife...

அலைபாயுதேல மாதவன் சொல்ற டயலாக்கை
சொல்லுங்கனு கேட்டாங்களா...

சரின்னு நானும்.... வாய்ஸ்ச எல்லாம் மாத்தி...
சொன்னேன் பாருங்க...

" நான் உன்னை விரும்பல..,
நான் உன் மேல ஆசைப்படல.,
நீ அழகா இருக்கேன்னு நினைக்கல..,
ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு..! "

உடனே என் wife...
" அப்ப நீங்க என்ன விரும்பல...?
நான் அழகா இல்லையானு " கோவப்படறா....

" ஏய்.. நீதானே மாதவன் சொல்ற டயலாக்கை
சொல்ல சொன்னேனு " கேட்டா...

" ஏன்... மாதவன் அந்த படத்துல அந்த
ஒரு டயலாக் மட்டும் தான் பேசி இருக்காரானு "
அடிக்க வர்றாய்யா...

# அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா..
எப்படி எல்லாம் போட்டு வாங்கறாய்ங்க...

அந்த பூரிக்கட்டையை தூக்கிட்டு ஓடிடுறா கைப்புள்ள....
.
.

08 April 2014

சின்ன கல்லு.. பெத்த ஆப்பு..!!!
எங்க ஊருக்கு பக்கத்துல சித்தர்கோவில்னு 
ஒரு கோவில் இருக்கு.. 

மலைமேல கோவில்., கோவிலை சுத்தி 
நிறைய மரங்கள்னு.. ரம்மியமா இருக்கும்.

அமாவாசை நாள்னா கூட்டம் நிரம்பி 
வழியும்... 

அப்படித்தான் ஒரு அமாவாசை அன்னிக்கு
நானும் , என் ப்ரெண்ட் சிவாவும் 
கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு 
வர்றோம்... 

ஒரு மரத்துக்கு கீழே உக்காந்துட்டு 
இருந்தான் எங்க ப்ரெண்ட் ரமணன்..
கூட ரெண்டு பேர் வேற இருந்தானுவ..

ஆனா சீரியஸா.. அந்த பக்கம் எட்டி எட்டி 
பாத்து என்னமோ பண்ணிட்டு இருந்தானுங்க..

அப்பவே எனக்கு தெரிஞ்சி போச்சு 
எதோ ரூட் விட்டுட்டு இருக்கானுவன்னு..

கிட்ட போயி... 

" என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..? "

" வாடா வெங்கி.. ஒண்ணுமில்ல சும்மா..! "

" சொல்லுங்கடா..! '

" ஹி., ஹி., ஹி.. அங்கே உக்காந்து இருக்குற 
பொண்ணு மேல ( சின்ன ) கல்லை போட்டுட்டு
இருக்கோம்..! "

அந்த பக்கம் யார்ரான்னு எட்டி பார்த்தேன்..

ஷாக் ஆகிட்டேன்.. 

என் காலேஜ்மேட் மீனா... 

" அடேய்... அது என் ப்ரெண்ட்டா..  "

" என்னாது உன் ப்ரெண்டா...?!! ஹப்பா..
இப்பதான் நிம்மதியா இருக்கு..?! "

" எதுக்குடா..?!! "

" தெரியாதவங்க யார் மேலயோ கல்லு
போடறோமேன்னு பீலிங்கா இருந்துச்சுல்ல..
ஹி., ஹி.,ஹி...!! "

" அடேய்.... அவங்க அண்ணன் இன்ஸ்பெக்டர்டா..! " 

இப்ப ரமணன் டென்ஷனாயிட்டான்...

" மச்சி., மச்சி... எதுனா பிரச்னை ஆகிடபோகுது 
எப்படியாச்சும் என்னை காப்பாத்தி விடுடா.. " 

" டோன்ட் வொர்ரி.. நான் முடிச்சிடறேன்..!! " 

மீனாகிட்ட போயி... 

" ரொம்ப கோவமா இருப்பேன்னு நெனச்சேன்..
இப்படி சிரிச்சிட்டு இருக்க..? "

" கோவமா எதுக்கு..? "

" அது... உன் மேல விழுந்துச்சில்ல கல்லு.. "

" கல்லா.. எம் மேல எந்த கல்லும் விழலையே..! "

"  நல்லா பாத்து சொல்லு.. இதா இந்த கல்லு..,
அதா அந்த கல்லு.. "

" உனக்கு என்ன பிரச்னை இப்ப..?!!  "

" ஒண்ணுமில்ல.. சரி உங்க அண்ணன் எங்கே..? "

" கோவிலை சுத்திட்டு வரேன்னு போயிருக்காரு "

" சரி., மறுபடியும் கேக்கறேன்.. உன்மேல எந்த
கல்லும் விழல..! "

" விழல.. விழல.. போதுமா..?!!! "

எனக்கு நிம்மதியா இருந்தது...

நான் உடனே ரமணனை பாத்து..

" டேய் ரமணா... நீ போட்ட கல்லு இவங்க
மேல படவே இல்லியாம்டா..!" னு சத்தமா
சொன்னேன்.. 

இப்ப அவன் முகத்துல ஒரு கொலவெறி
தெரிஞ்சது...

" ஹா., ஹா., ஹா...! ( வில்லன் சிரிப்பு ) "
.
.

05 April 2014

சூரியனுக்கே டார்ச் அடிக்கற பயலுக...!


என் பையன் சூர்யாவும், அவன் ப்ரெண்டும்
பேசிட்டு இருந்தப்ப....

அவன் ப்ரெண்டு சொன்னான்..

" சூர்யா.. எங்கப்பா புதுசா ஒரு கேமரா
வாங்கி இருக்காருடா.. "

" அப்படியா..?!! "

" ம்ம்.. 50X ஜூம்..! "

" அப்படின்னா..?!! "

" தூரத்துல இருக்கறதை கூட இங்கே
இருந்தே போட்டோ பிடிக்கலாம்...!!! "

" எவ்ளோ தூரம்டா பிடிக்கலாம்..?!! "

" எங்க வீட்ல இருந்து மாரியம்மன் கோயிலையே
( சுமார் 1 கி.மீ ) எங்கப்பா போட்டோ புடிச்சார்னா
பாரேன்... "

" ப்பூ.. அவ்ளோதானா..?!! எங்கப்பா நிலாவையே
போட்டோ புடிச்சி இருக்காரு... அதுவும் மொபைல்
கேமரால... தெரியுமா..!? "

# மை சன் ராக்ஸ்...!!!
.
.

01 April 2014

மனைவிக்கு பயந்தவரா நீங்கள்..? ( ஒரு சைக்காலஜி டெஸ்ட் )ஒவ்வொரு கேள்வியையும் பொறுமையா படிச்சி, 
அதுக்கு பொருத்தமான பதிலை டிக் பண்ணுங்க..

( A : 10 Marks, B : 5 Marks , C : 0 Marks )

1. உங்களுக்கு பிடிச்ச கலர்.?

A. புளு 
B. பிங்க்
C. இரண்டும் இல்லை

2. விரும்பி சாப்பிடுவது..? 

A. வீட்டில் சமைச்ச உணவு 
B. ஹோட்டலில் வாங்கிய உணவு 
C. இரண்டுமே 

3. விரும்பி கேக்கறது 

A. பழைய பாட்டு
B. புதிய பாட்டு 
C. ரெண்டுமே

4. பிடிச்ச பூ.?

A. மல்லிகை 
B. ரோஜா 
C. இரண்டும் இல்லை

5. டி.வியில் அடிக்கடி பார்ப்பது

A. செய்தி சேனல் 
B. விளையாட்டு சேனல்
C. ரெண்டும் இல்லை

6. மனைவியின் மொபைல் நம்பர் 

A. மனப்பாடமாக தெரியும்
B. கொஞ்சம் யோசிச்சா சொல்லிடுவேன்.
C. தெரியாது

7. பிடிச்ச படம் 

A. வீரம்
B. ஜில்லா
C. இரண்டுமே இல்லை

8 பிடிச்ச இசையமைப்பாளர் 

A. இளையராஜா 
B. ஏ.ஆர். ரஹ்மான்
C. இருவருமே 

9. விரும்பி அணிவது 

A. வேஷ்டி , சட்டை 
B. பேண்ட், சர்ட்
C. ஜீன்ஸ் , டி-சர்ட்

10. பிடித்த காய்கறி 

A. வெண்டைக்காய்
B. கேரட், பீட்ரூட் 
C. உருளைக்கிழங்கு

ரிசல்ட்  பார்க்க... இங்கே க்ளிக்...!! 

ரிசல்ட்..


" ஓஹோ... இந்த டெஸ்ட்ல எல்லாம்
கலந்துக்குற அளவு தைரியம் வந்துடுச்சா...

வீட்டுக்கு வாங்க.. அப்ப இருக்கு உங்களுக்கு..! "

:)

April 1 வாழ்த்துக்கள்...!! ( ஹி, ஹி., ஹி..!! )
.
.